4224.

     கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
          கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
     எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
          என்றுரைத்ே­தன் இதனாலோ எதனாலோ அறியேன்
     நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
          நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
     பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
          பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.

உரை:

     என்னுடைய கணவராகிய சிவபிரானுடைய திருமேனியை, ஏனைப் பெண்கள் காணின் கண்ணேறுபடும் என்று அஞ்சுகின்றேன் என்றும், நல்லெண்ணமில்லாத மகளிர் அவரது திருவுருவைக் காண விரும்புகின்றார் என்றும் கூறினேனாக, அது காரணமாகவோ வேறு எதனாலோ, என் காதற் கடவுளாகிய சிவபிரான் என்பால் வந்திலர் என்று இசைத்தேன்; எனது சொல்லைக்கேட்ட தோழி பகைவர் போல, முகம் கடுத்து என்னை நோக்குகின்றாள்; அன்பு தந்து வளர்த்தெடுத்த செவிலியும் தன் மனத்தின்கண் வன்கண்மை கொண்டு பேசுகின்றாள்; ஆயமகளிர் பலரும் பலப்பல சொல்லி என்னை ஏசுகின்றார்கள்; பெருமை பொருந்திய நடராசப் பெருமானது திருவிருப்பத்தை நான் அறிகிலேன். எ.று.

     கண்ணாற் பார்க்கப்படுதலால் ஊறுண்டாயின் அதனைக் கண்ணேறு என்பது உலக வழக்கு. இது கண் திருஷ்டி எனப்படுவதுமுண்டு. கண்ணேறு படுதலும் ஊறுபட்டு வருந்துவதும் மண்ணக மக்கட்கன்றித் தேவதேவராகிய சிவனுக்கில்லை; அது தெரிந்து பேசாமை குற்றமாயிற்று. எண்ணாத மனத்தவர் - அன்பில்லாதவர். அன்பிலார் பார்வையும் மொழியும் தீது செய்யும் என்பது உலகியல். அன்பிலாரிடத்தும் அன்பு செய்வது சிவனது திருவருட் சிறப்பு. அதனை நினைவிற் கொள்ளாமை குற்றம். நண்ணார் - பகைவர். இல்லுருபு - ஒப்புப் பொருட்டு. செவிலி நல்குதலாவது அன்பு செய்தல். வன்பு - அன்புக்கு மறுதலை; வன்கண்மை என்பது கருத்து. மல்குதல் - மிகுதல். பெண்ணாயம் - விளையாட்டு மகளிர் கூட்டம். தலைவியின் குணஞ் செயல்களைப் பழித்துப் பேசுதல் பற்றி, “பல பலவும் பேசுகின்றார்” எனத் தலைவி வருந்திக் கூறுகின்றாள். பெரிய நடராயர் - பெருமைப் பண்புடைய நடராசப் பெருமான்.

     (15)