4226.

     மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
          வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
     இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
          என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
          புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
     பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
          பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.

உரை:

     மனையின் கண்ணுள்ள மலர்ப் படுக்கையின் மேல் என்னைச் சிவபிரான் கூடியபோது, என் மேனி வடிவம் இன்ப வடிவாயினேன் என்றுரைத்தேன்; அது காரணமாகவோ; முன்னாளில் நான் புரிந்த பெருந்தவத்தால் இந்நாளில் நான் வருத்தமொன்றும் அறிகிலேன் எனவுரைத்தேன்; அதனாலோ வேறு எதனாலோ அவர் என்பால் வந்திலர்; என் சொற்களைக் கேட்ட தோழி, ஒப்பனை செய்யப்பட்ட தன் முகம் கறுத்துச் சினம் மிக்கு நிற்கின்றாள்; செவிலியும் துன்பத்தால் புழுங்கிய மனமுடையளாய் இரங்குகின்றாள்; அயற் பெண்களும் வற்றிய பனையோலை போலச் சலசலக்கின்றார்கள்; கடவுளாகிய என்னுடைய நடராசப் பெருமானது திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன். எ.று.

     தூய சிவஞானத் திருவுருப் பெற்றாலன்றிச் சிவபோக நுகர்ச்சி கூடாதென்பது பற்றி, “எனையணைந்த போது வடிவு சுக வடிவானேன்” எனவும், சிவயோக போகம் நுகர்வார்க்குத் துன்பமில்லை என்று சான்றோர் கூறுதலின், “இனை வறியேன்” எனவும், இது முன்னைத் தவயோகப் பயன் என்பாளாய், “முன் புரிந்த பெருந் தவம் என் புகல்வேன்” எனவும் தலைவி இயம்புகின்றாள். இதனை “மக்கட்குக் கூறரிதானது, கற்றெட்டத்தான் முடியாதது, மற்றொப்புக்கு யாது மொவ்வாதது, மனதாலே, மட்டிட்டுத் தேட வொணாதது, தத்துவத்திற் கோவை படாதது” (திருப்புகழ்) என்று அருணகிரிநாதர் முதலிய சான்றோர் கூறுவதை நோக்கத் தலைவி கூற்று வேறுபடுதலால், தோழியும் செவிலியும் பிறரும் கருத்து மாறுபட்டுச் சினக்கின்றனர் என அறிக. சினமிக்க வழி முகம் நிறம் கருமையுறுதலால், “கரி முகமாய்ப் பொங்கி நின்றாள் பாங்கி” என்றும், செவிலி வருந்துகின்றமை பற்றி, “புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி” என்றும் தலைவி கூறுகின்றாள். உலர்ந்த பனையோலை ஓசை செய்வது போல, அயற் பெண்டிர் அலர் தூற்றுகின்றனர் என்றாளாயிற்று. பண்ணவர் - கடவுள்.

     (17)