4229. அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
இரும்புமனம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
உரை: மாற்றரிய பொன்போலும் திருமேனியை யுடைய சிவபிரானாகிய என் தலைவர் என்பால் வந்தணையும் காலம் இதுவாதலால் என்னைத் தனியே விடுத்து நீங்குவீராக என்றும், அவரைக் காண்பவர் இரும்பொத்த மனமுடையவராயினும் கண்ட மாத்திரையே இளகிக் குழைந்திடுவர் என்றும் எடுத்துரைத்தேன்; அதனாலோ வேறு எதனாலோ அவர் ஏனோ வந்திலர்; கரும்பு போற் பேசும் தோழியும் நாய்க் கடுகு போலும் சொற்களை வழங்குகிறாள்; மகிழ்வுடன் என்னை எடுத்து வளர்த்த செவிலியும் புளியைத் தின்றவர் போல முகம் சுளிக்கின்றாள்; என்னை விரும்பிச் சூழ்ந்திருக்கும் மகளிர் பலரும் அலர் தூற்றுகின்றார்கள்; வித்தகராகிய நடராசப் பெருமானது திருக்கருத்தை அறிகிலேன்; யான் யாது செய்வேன். எ.று.
மாற்றுக் காண வொண்ணாத பொன் னென்றற்கு, “அரும் பொன்” என எடுத்து, “அரும் பொன் அனையார்” எனச் சிவபிரானைத் தலைவி புகழ்கின்றாள். அணங்கு - தெய்வப் பெண். எளிதில் உருகாமை தெரிவிக்க, “இரும்பு மனமானாலும்” என இயம்புகிறாள். நாய்க் கடுகு, கடுகு போல் முளைத்துக் காய்க்கும் செடி வகை. இதன் கடுகு - உருவிற் சிறிதாயினும் கசப்புச் சுவை மிக்கதென அறிக. அலர் - பழிமொழி. அரும்புதல் - ஈண்டு மொழிதல் மேற்று. வித்தகர் - எல்லாம் வல்லவர். சித்தம் - கருத்து. (20)
|