4232. மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
ஒருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
உரை: அம்பலத்தில் ஆடுகின்ற கணவராகிய சிவபெருமானுடைய புகழையன்றி, உம்முடைய சொற்களை என்னுடைய செவி இயலாது என்று என் சேடியர்க்குச் சொன்னேன் என்றும், இப்பொழுது என் உயிர் போன்ற அப்பெருமானைத் தனித்துக் காண்பதற்கு இடமில்லாது வருந்துகிறேன் என்றும் சொன்னேன்; இவ்வாறு சொன்னதனாலோ, வேறு எதனாலோ, அவர் வாராமைக்குக் காரணம் அறிகிலேன்; இந்நிலையில் தனது ஆடையின் முந்தானை தானே அவிழ்ந்து விழுமாறு, என்னுடைய உயிர்த் தோழி என்னை விட்டு நீங்கி விரைந்து செல்கின்றாள்; என்னை வளர்த்தவளாகிய செவிலியும் மதர்ப்புடன் கடுகிச் செல்கின்றாள்; மனம் பொருந்தாத அயற்பெண்டிர் போரில் வெற்றி பெற்றவர்களைப் போலச் செருக்குகின்றார்கள்; ஒப்பற்றவராகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளத்தை நான் அறிந்திலேன். எ.று.
அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாதலால் சிவபெருமானை, “மன்றாடுங் கணவர்” என்று மகிழ்ந்துரைக்கின்றாள். வார்த்தை இரண்டனுள் முதலது புகழையும் பின்னது சொல்லையும் குறிக்கின்றன. ஆவி அன்னவர் - உயிர் போன்றவர். தோழியரை விலகிச் செல்ல வேண்டும் என்ற கருத்தால், “ஆவி அன்னவர்க்குத் தனித்த இடங் காணேன்” என்று கூறுகின்றாள். முடுகி நடத்தல் - தனது வெறுப்புணர்வு புலப்படக் கடுப்புடன் செல்லுதல். மதர்ப்பு - அசட்டை. ஒத்த கருத்தில்லாத பெண்கள் என்றற்கு, “ஒன்றாத மனப் பெண்கள்” எனத் தலைவி உரைக்கின்றாள். போரில் வென்றவர் தோற்றாரை நோக்கி நிமிர்ந்த பார்வையுடன் செல்வதுபோல, அயற்பெண்டிர் தன்பால் ஒழுகினமை விளங்க, “ஒன்றாத மனப் பெண்கள் வென்றாரின் அடுத்தார்” என விளம்புகிறாள். ஒருத்தர் - ஒப்பற்றவர். (23)
|