4235. நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து.
உரை: தண்ணீர்க்குப் பொருந்திய பெயர்களில் மூன்றெழுத்துக்களையுடைய, சலம் என்பது சொற்போர்க்குப் பொருந்துவது என்று அறியாத புல்லிய நெஞ்சமே! நீர்மையுடன் தில்லையம்பதியிலுள்ள அழகிய அம்பலத்திற் பொருந்தி நின்று, ஆடும் கூத்தப்பெருமானை ஒன்றி நயந்து எண்ணுவாயாக. எ.று.
நாமம் - பெயர். நிலை - ஈண்டு எழுத்தின் மேற்று. சொல் நிற்றற்கு எழுந்து ஆதாரமாதலால், “நிலை மூன்று” என்கின்றார். சொற்போர் வகையான சலவாதம், சலம் எனவும் வழங்குவதாகையால், “போர்க்கு இசைந்த தென்றறியாய்” எனப் புகல்கின்றார். புன்மை - புல்லறிவுடைமை. ஒன்றென்னும் சொல்லை எட்டு முறை கூறியது, எண்ணொன்றென இயைந்து மனம் ஒன்றி எண்ணுக என்னும் பொருளதாம். “எண்ணொன்றி நினைந்தவர் தம்பால் உண்ணின்று மகிழ்ந்தவன்” (பனையூர்) என்று ஞானசம்பந்தர் நவில்வது காண்க. மணி - அழகு. மணி யிழைக்கப்பெற்ற அம்பலம் என்றுமாம். ஒன்றுவான் - பொருந்தி நின்று ஆடுபவன்.
இதனால், தில்லையம்பலவாணனை மனம் ஒன்றி நினைப்பாயாக என்பதாம். (2)
|