4236. ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும்.
உரை: ஈறளவில் நின்றொழியாமல் சகர ககார வர்க்கங்களாலாகிய, பெயரையுடைய பறவையான சுகம் என்பது இம்மை மறுமை இரண்டிலும் வேண்டப்படுவது என்று சான்றோர் கூறுவர்; சுகமே; ஒப்பில்லாத தலைமகட்காகத் தில்லையம்பலவாணர்பால் தூது செல்க; அஃது எனக்கும் நினக்கும் என்றும் நலம் பயப்பதாம். எ.று.
சுகம் என்பது பறவையாகிய கிளியைக் குறிக்கும். இதன் ஈறாகிய கம் என்பது வானுலக போகத்தைக் குறித்தலால், அதுதானும் நிலையில்லது எனத் தெளிக என்றற்கு, “ஈற்றில் ஒன்றாய்” என அறிவிக்கின்றார். சகர வர்க்கத்துக்குச் சு எனவும் ககர வர்க்கத்துக்குக் எனவும் கூட்டிச் சுகம் என இயைத்தால் கிளி யென்னும் பறவைக்குப்
பெயராம். இருமை - இம்மை மறுமை. சாற்றுதல் - சொல்லுதல்; அறிவித்தலுமாம். ஏகு - செல்க. தூது செல்லின், அஃது இருமைக்கும் என்றும் எனக்கும் நினக்கும் சுகமாம் என வுரைத்தலுமாம்.
இது தோழி தலைமகள் பொருட்டுக் கிளியை அம்பலவாணர்பால் தூது செல்க என விடுத்தவாறாம். (3)
|