4237.

     கைத்தலமே லிட்டலையிற் கண்ணுடையான் கால்மலர்க்குக்
     கைத்தலமே லிட்டலையிற் கண்ணீர்கொண் - டுய்த்தலைமேல்
     காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
     காணாயே நெஞ்சே களித்து.

உரை:

     இல்வாழ்வில் பெறும் இன்பத்தை வெறுத்துக் கண்ணுதற் கடவுளின் திருவடியாகிய தாமரையைத் தரிசித்துக் கையைத் தலைமேல் குவித்து வைத்து, ஆறுபோல் கண்ணில் நீர் சொரிந்துகொண்டு மக்களும் தேவர்களும் உய்தி பெறுவதைக் கண்டிலையாயின், என்றும் உள்ளதாகிய சிவகதி இன்பத்தை உலகியற் போகத்தில் களிப்புற்று மயங்கும் நெஞ்சமே, கைம்மேல் கனியாக நீ காணாது ஒழிகின்றாய். எ.று.

     கைத்தல் - வெறுத்தல். மேலிடுதல் - மேற்கொள்ளுதல். அலையிற் கைத்தலை மேலிட்டு என இயைத்து, வருத்துகின்ற இல்வாழ்க்கை இன்பத்தை வெறுத்தலை மேற்கொண்டு என்று பொருள் கொள்க. உய்தல் - உய்த்தல் என வந்தது. அலை - ஆகுபெயரால் கரையை அலைத்தோடும் ஆற்றின் மேலதாயிற்று. கண்ணுடையான் - நெற்றியிற் கண்ணை யுடையவனாகிய சிவன்; அருளொழுகும் கண்ணையுடையவன் என்றுமாம். உண்மைக் கதி - நிலைபேறுடைய சிவகதி. கைக்கனி என்பது கைக்கணி என வந்தது.

     இதனால், சிவன் திருவடியைத் தலைமேற் கைகுவித்துக் கண்ணீர் சொரிந்து, வழிபடாயாயின் நெஞ்சமே நீ சிவகதி காணாய் என்பதாம்.

     (4)