4238. கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.
உரை: யாவர்க்கும் பொதுவாய்ச் சிவன் அம்பலத்தில் நடிக்கும் பொழுது, மாணிக்க மலையோ, பாற்கடலின் வெண்மணலோ, செங்கனியோ, செங்கரும்போ என்று இவ்வுலகில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்; மாணிக்கமலை முதலிய அதுவாகவும் அதன் உட்பொருளாகவும், அவற்றிற்கும் அப்பாலாய் உள்ளதாகும் பரம்பொருள் என்றுணர்ந்து உரைக்கின்றோமில்லை. எ.று.
கல்லோ மணலோ எனப் பொதுப்படக் கூறுவதால், கல்லை மாணிக்கமலை என்றும், மணலைப் பாற்கடல் மணல் என்றும் உரை கூறப்படுகிறது. மாணிக்கமலைபோலச் சிவன் திருமேனி காட்சி தருவதாலும் அம்மேனியில் பூசப்பட்ட வெண்ணீற்று நிறம் விளங்கப் பாற்கடல் மணல் கூறப்பட்டது. கல்லும், மணலும், கனியும், கரும்பும் எனச் சொல்லிக்கொண்டே இருக்கின்றோமேயன்றி அவையேயாகவும், அவற்றின் பொருளாகவும், அவற்றின் வேறாய், அப்பாலாய்ச் சிவன் இருக்கின்றான் என்று உணர்கின்றோமில்லை; உணர்ந்து உரைப்பதுமில்லை எனத் தெரிவித்தவாறாம். (5)
|