4241. நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும்வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னில்இப்பாட் டில்.
உரை: அம்பலத்தில் நடிக்கின்ற கூத்தப் பெருமான் எழுந்தருளும் தில்லையில் அழகிய கோபுரத்தின் அடியிலுள்ள தேவியாகிய சிவகாமி, கோயில் வடபகுதியில் எழுந்தருளிப் பச்சைக்கொடி படர்ந்து நிற்கும் மலை போலும் என எண்ணிப் பார்த்தால் சிதம்பரம் தெரியும்; எவ்விடத்து என்னில் இப்பாட்டில். எ.று.
அடிப்பாவை - கீழே உள்ள பாவையாகிய சிவகாமி. கொடி - பச்சைக் கொடி. இன்று எவ்விடத்து என்னில் இப்பாட்டில் எனப்பிரித்துக் கொள்க. அடிப்பாவை என்பதற்கு உலக முதற் காரணியாகிய சிவகாமி எனினும் அமையும். (8)
|