62. சிவபதி விளக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4243. உரைவளர் கலையே கலைவளர் உரையே
உரைகலை வளர்தரு பொருளே
விரைவளர் மலரே மலர்வளர் விரையே
விரைமலர் வளர்தரு நறவே
கரைவளர் தருவே தருவளர் கரையே
கரைதரு வளர்கிளர் கனியே
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே
பரையொளி வளர்சிவ பதியே.
உரை: சான்றோர்களின் சொற் செயல்களில் தோன்றிப் பெருகும் கலைநலமும், கலைவகைகளை விளக்கம் புரியும் உரைநலமும், உரையும் கலையும் நல்கும் மெய்ப்பொருளாயவனே! மணம் பொருந்திய மலரும், மலரிடத்துத் தோன்றிப் பெருகும் நறுமணமும், நறிய மணமுடைய மலரிடத்தூறும் தேனாயவனும், நீர்நிலைகளில் கரையிடத்து வளரும் மரவகையும், மர வகைகளால் உரம் மிகும் கரையும், கரையும் மரவகையும் சேர்ந்து பழுத்தளிக்கும் கனியாயவனும், பரையாகிய சத்தியிடத்துச் சுரக்கும் ஒளியும், ஒளி மிகுவிக்கும் பரையும், பரையும் ஒளியும் சிறந்தோங்குவிப்பவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.
சான்றோர் - இயற்கையும் செயற்கையுமாகிய மதிநுட்பமும் நூலறிவுமுடைய புலமை நன்மக்கள். உரை என்றது சான்றோர்களின் சொற்கள் மேற்று; புகழுமாம். கலை பலவற்றிற்கும் விளக்கமும் பொருள் நலமும் காட்டுவது உரையாதலின், “கலைவளர் உரையே” என்று கூறுகின்றார். கலைகளால் எய்தும் பயன் பொருள்களின் உண்மை யுணர்வாதலால், “உரை கலை வளர்தரு பொருளே” எனவுரைக்கின்றார். விரை - மணம் மலரிடத்து மணமும், மலரின் தேனும் மலரை ஆதாரமாகக் கொண்டவையாதலால், “விரைமலர் வளர்தரு நறவே” என விளம்புகின்றார். நீர்நிலையின் கரையிடத்தே நின்று அஃது எளிதில் கரைந்து கெடாதபடி வன்மை யுருவித்தலால் அதனை, “தருவளர் கரை” எனவும், உரம் பெற்ற நிலத்தில் நின்றோங்கும் மரம் இனிது காய்த்துக் கனிகளை நல்குவது பற்றி, “கரைதரு வளர்கிளர் கனியே” எனவும் இயம்புகின்றார். பரை - சி்வசத்தி. அஃது ஒளி மயமாதலின். “பரை வளர் ஒளியே” என்றும், ஒளி நலத்தால் சத்தியுண்மை உணரப்படுதலின், “ஒளி வளர் பரையே” என்றும், பரைக்கும் ஒளிக்கும் ஆதாரமாதலின், “பரையொளி வளர் சிவபதியே” என்றும் பகர்கின்றார்.
இதனால், கலைதரு பொருளும், மலர்தரு நறவும், தருகிளர் கனியும், ஒளி வளர் பரையும் சிவமாகிய பதி என்பது கருத்தாம். (1)
|