4245. அடிவளர் இயலே இயல்வளர் அடியே
அடியியல் வளர்தரு கதியே
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே
முடிபொருள் வளர்சுக நிதியே
படிவளர் விதையே விதைவளர் படியே
படிவிதை வளர்பல நிகழ்வே
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே
தடிமுகில் வளர்சிவ பதியே.
உரை: அடிப்படையாகிய அறத்தின்கண் வளர்கின்ற நல்லியலும், நல்லியலால் விரிந்தோங்கும் அறப் பயனும், அறனும் நல்லியலும் விளைவிக்கின்ற நற்கதியானவனும், நான்மறை முடியில் திகழும் ஞானப் பொருளும், ஞானத்தின் எல்லையாகிய பிரமப் பொருளும் ஞானமும் முடிபொருளும் விளைவிக்கும் இன்ப நிதியானவனும், நிலத்தின்கண் விளைதற் கேதுவாகிய விதைப் பொருளும், அவ் விதை முளைத்துப் பயன் விளைவிக்கும் நன்னிலமும், நிலமும் விதையும் சேர்ந்து பலன் நல்கும் நிகழ்வாயவனும், மின்னும் இடியும் தோன்றுதற்கு இடமாகிய முகிலும், முகில் ஏதுவாகத் தோன்றும் இடி மின்னலாகியவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.
அறத்தால் விளைவது நற்கதி என்பாராய், “அடியியல் வளர்தரு கதியே” என்று கூறுகிறார். உலகியல் வாழ்வுக்கு அடிப்படை அறமாதலாலும், அதனால் விளைவது நற்கதியாதலாலும் இரண்டையும் வற்புறுத்துகின்றார். முடி என்றது நான்மறையாதலின், அந்தம் அவற்றால் பெறப்படுவது பிரம ஞானம்; பிரமஞானத்தால் எய்தப்படுவது சிவ போக சுகமாதலால், “முடி பொருள் வளர் சுகநிதியே” என்று மொழிகின்றார். விதை முளைத்தற்கு நிலம் ஆதாரமும் முளைக்கு விதை ஆதாரமுமாதல் பற்றி, “படி விதை வளர் பல நிகழ்வே” எனப் பகர்கின்றார். பல நிகழ்வு - பயன் விளைவு. தடி என்றது மின்னலோடு கூடிய இடி. முகில் இடமாகத் தடி தோன்றுதலால், “முகில் வளர் தடி” என்கின்றார்.
கதியும் சுகநிதியும், பல நிறைவும், முகில் இடியுமாயவன் சிவபதி எனத் தெரிவித்தவாறாம். (3)
|