4246.

     சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே
          சிரமுதல் வளர்தரு செறிவே
     தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே
          தரநிலை வளர்தரு தகவே
     வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே
          வரநிறை வளர்தரு வயமே
     பரம்வளர் பதமே பதம்வளர் பரமே
          பரபதம் வளர்சிவ பதியே.

உரை:

     முடிபு தோற்றுவிக்கும் வேர் முதலும், வேர் முதல் ஏதுவாகத் தோன்றும் முடிபொருளும், முடிவும் தோற்றமும் செறிந்திருக்கும் செறிவாகியவனும், தகுதி பயக்கும் மெய்ந்நிலையும், அந்த நிலையை விளைவிக்கும் தகுதியும், தகுதி நிலை பெறுவிக்கும் வன்மையானவனும், மேன்மை தோற்றுவிக்கும் நிறைவுத் தன்மையும், நிறைவுப் பண்பால் உயர்ந்தோங்கும் மேன்மை நலனும், மேன்மையும் நிறைவும் நல்கும் வன்மையும் ஆயவனும், பரமாம் நிலையை விளக்கும் அறுவகைப் பதங்களும் - அப் பதங்கள் காட்டும் பரமாந் தன்மையும், பரத்தையும் பதத்தையும் தோற்றுவித்து ஓங்குபவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.

     மரத்தின் வேர் முதல் வளர்ச்சி முடிவில் வேர்க்கு முதலாகிய விதையை விளைவிப்பது பற்றி, “சிரம் வளர் முதலே” எனவும், முதலாகிய வேரும் விளைவாகிய விதையும் செறிந்து பொருண்மை யுருவில் பொலிவது பற்றி, “சிரம் முதல் வளர்தரு செறிவே” எனவும் தெரிவிக்கின்றார். தகுதியால் நிலைபேறும், நிலைபேற்றால் தகுதியும் இயைந்து பொருண்மைக்கு உறுதி தருதலால், “தரநிலை வளர்தரு தகவே” என்று கூறுகிறார். தரம் - தகுதி. வயம் - உறுதி. வரம் - மேன்மை. மேன்மைப்பண்பால் நிறைவும் நிறைவில் உயர்வும் நிறைதலின், “வரம் நிறை வளர்தரு வயமே” எனவும், பதங்கள் ஒன்றுக்கொன்று மேன்மேலாய் இருந்து மேன்மையைக் காட்டுதலின், “பரபதம் வளர் சிவபதியே” எனவும் இயம்புகிறார். பதங்கள் - பரம பதம், பிரம பதம், வைகுந்த பதம், உருத்திர பதம், மகேசுர பதம், சாதாக்கிய பதம் என்ற ஆறுமாம்.

     இதனால், வேர் முதல் செறிவும், தர நிலையும், வரநிறைவும், தருவயமும், பரபதம் தரும் சிவபதியாம் எனக் காட்டியவாறாம்.

     (4)