4247.

     திருவளர் வளமே வளம்வளர் திருவே
          திருவளம் வளர்தரு திகழ்வே
     உருவளர் வடிவே வடிவளர் உருவே
          உருவடி வளர்தரு முறைவே
     கருவளர் அருவே அருவளர் கருவே
          கருவரு வளர்நவ கதியே
     குருவளர் நெறியே நெறிவளர் குருவே
          குருநெறி வளர்சிவ பதியே.

உரை:

     திருவாகிய நலம் நல்கிச் சிறக்கும் வளமாகவும், வளத்தால் தோன்றி விரியும் திருவும், திருவும் வளமும் மிக்கு ஒளிர்விக்கும் ஒளியாயவனும், பொருள்களின் உருவின்கண் திகழும் வடிவும், வடிவால் சிறப்புறும் உருவும், உருவும் வடிவம் ஒருங்கமைந்து ஓங்குதற்கு முறையுளானவனும், கருப்பொருளாய்க் காண நிற்பதன்கண் அருவ நிலையும், அருவப் பொருளாய் உணர்வால் காண்பதன்கண் நிகழும் கருப்பொருளும், கருவும் அருவுமாய்க் கலந்து ஒன்றிக் காட்டும் புதுமைக் கதியாயவனும், நல்லாசிரியன் காட்டருளும் நன்னெறியும், அந்நெறியால் விளக்கமும் ஆசிரியனும், அக்குருபரனும் அவனுடைய நன்னெறியுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.

     திருவுடைமையால் வளம் உணரப்படுதலின், “திருவளர் வளமே” என்றும், திருவும் வளமும் ஒருவருக்கு ஒளி தருதலால், “திருவளம் வளர்தரு திகழ்வே” என்றும் இசைக்கின்றார். உருவின்கண் வடிவமும், வடிவின்கண் உருவமும் பிடிப்பின்றி இயைந்திருக்கும் இயல்பு சிவ விளைவு எனத் தெரிவித்தற்கு, “உருவடி வளர்தரு முறைவே” என இயம்புகின்றார். கரு - உருவப் பொருள் மேற்று. பொருட்கு உருவமும் அருவமும் அமைவது தோற்றத்தின் இயல்பு பற்றி அதனை, “நவகதி” என்று நவில்கின்றார். நவம் - புதுமை.

     இதனால், திருவளர் திகழ்வும், உருவடி முறைவும், கருவரு வளர்கதியும், குருநெறியும் சிவபதி விளக்கம் என்பதாம்.

     (5)