4248. நிறைவளர் முறையே முறைவளர் நிறையே
நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே
புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே
துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே
மறைபொருள் வளர்சிவ பதியே.
உரை: நிறைவின்கண் உளதாகும் முறையமைதியும், முறைமைக்கு ஏதுவாய் விரியும் நிறைவும், நிறைவும் முறையும் ஓங்குதற்கிடமாகிய பெருநெறியாளனும், பொறுத்தற் பண்பால் மேம்படும் நிலமும், நிலத்திடை விளங்கும் பொறுமைப் பண்பும், நிலமும் பொறுத்தற் பண்பும் ஆதாரமாகக் கொண்டு நிற்கும் நீராகியவனும், துறைகளால் உயரும் கடலும், கடல்களாற் சிறப்புறும் துறைகளும், துறையும் கடலுமாய்க் கடைவார்க்குப் பெறலாகும் அமுதமானவனும், வேதங்கள் ஓதும் பொருளும், பொருளாற் பொலியும் வேதங்களும், வேதப் பொருளால் மேன்மையுறுபவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.
அறிவால் நிறைந்து சீரிய செயல்முறை அமைந்தவிடத்து உளதாவது பெருநெறியாதலால், “நிறைமுறை வளர் பெருநெறியே” என்று பேசுகின்றார். பொறை - தாங்குதல். பூமியின் சிறப்பியல்பு தன்னை இகழ்வாரையும் தாங்குவதாதலால், “பொறை வளர் புவியே” என்றும், நிலத்தின் பொறுத்தல் தன்மை கண்டு அதன் மேல் நீராகிய பூதம் நிற்பதால், “புவி பொறை வளர்தரு புனலே” என்றும் புகல்கின்றார். கடல்களில் தலைசிறந்தது பாற்கடல் எனப்படுவது பற்றி அதனிடத்து அரிதிற் பிறந்த அமுதத்தை, “துறை கடல் வளர்தரு கதை” என மொழிகின்றார். சுதை - அமுதம். வேத ஞானத்தின் முடிபொருள் பிரம ஞானமாதலின், “மறை வளர் பொருளே” என்றும், பிரமமே சிவமாதல் தோன்ற, “மறைபொருள் வளர் சிவபதியே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், பெருநெறியும், கடல் வளர் சுதையும், மறை பொருளுமாவது சிவபதி என விளக்கியவாறாம். (6)
|