4249.

     தவம்வளர் தயையே தயைவளர் தவமே
          தவநிறை தயைவளர் சதுரே
     நவம்வளர் புரமே புரம்வளர் நவமே
          நவபுரம் வளர்தரும் இறையே
     துவம்வளர் குணமே குணம்வளர் துவமே
          துவகுணம் வளர்தரு திகழ்வே
     சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே
          சிவபதம் வளர்சிவ பதியே.

உரை:

     தவநெறியின்கண் சிறக்கும் அருட் செல்வமும், அருள் நலம் மிகுதற் கேதுவாகிய தவப் பயனும், தவமும் அருட்பண்பும் கலந்த ஞானமானவனும், புதுமை மிளிரும் உடம்பும், உடம்பிற் சிறக்கும் புதுமையும், இரண்டும் ஒருங்கியைந்த இறைவனும், ஆன்மாவின்கண் அமையும் குணநலமும், குணநலத்தால் ஓங்கும் ஆன்மப் பண்பும், இரண்டாலும் எய்தும் விளக்கமானவனும், சிவானந்தம் நல்கும் சிவபதமும், சிவபதத்தில் திகழும் சிவமும், சிவமும் சிவபதமுமாய் இலங்குபவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.

     தயை - அருட்பண்பு. அருளறம் தவத்திற்கு உருவமாதலின், “தயை வளர் தவமே” என்றும், அதுவே தவஞானமாய்ச் சிறப்பது பற்றிச் சதுர் என்றும் கூறுகின்றார். சதுர் - ஞானம். நவம் - புதுமை; ஒன்பது எனப் பொருள் கொண்டு ஒன்பது துவாரங்களையுடைய உடம்பு என வுரைப்பதுமுண்டு. துவம் - ஆன்மா. நன்மை தீமை எனக் குணம் இரண்டாதல் பற்றி இருவகையாக நிலவுகின்ற குணப் பொருள் என்று பொருள் கொண்டு, “துவகுணம் வளர்தரு திகழ்வே” என்று ஆன்மாவை விளம்புகின்றார், எனக் கூறுபவரும் உண்டு. சிவபோக நுகர்ச்சிக்குரிய பதம் சிவபதமாதலின், “சிவம் வளர் பதமே” எனத் தெரிவிக்கின்றார். சிவபோகம், சிவஞானமும் சிவபதமும் பதமுமாய்த் திகழ்வது விளங்க, “சிவபதம் வளர் சிவபதியே” என்று செப்புகின்றார்.

     இதனால், தயை வளர் சதுரும், இறையும், துவகுணத் திகழ்வும், பதம் வளர் சிவமும், சிவபதியாம் எனத் தெரிவித்தவாறாம்.

     (7)