4250. நடம்வளர் நலமே நலம்வளர் நடமே
நடநலம் வளர்தரும் ஒளியே
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே
இடல்வலம் வளர்தரும் இசைவே
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே
திடவுளம் வளர்தரு திருவே
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே
கடமுயிர் வளர்சிவ பதியே.
உரை: நடனத்தின்கண் விளங்கும் நலமும், நலம் பெருகும் நடனமும், நடன நலங்களைத் திகழ்விக்கும் சிவவொளியும், இடப்பாலால் சிறப்புறும் வலப்பகுதியும், வலத்தால் பொலியும் இடப்பாலும், இடமும், வலமுமாய் இசைந்திருக்கும் பொருளிசைவானவனும், திண்மையிடம் பெறும் உள்ளமும், உள்ளத்தால் சிறப்புறும் மனத்திண்மையும், இரண்டின் அமைதியால் எய்த வரும் செல்வனும், உடம்பின்கண் மேம்படும் உயிரும், உயிராற் பேணப்படும் உடம்பும், உடம்பும் உயிருமாய் நலம் பெறுவிப்பவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.
நடம் - அம்பலத்தாடும் திருக்கூத்து. அதனால் ஆன்மாக்கள் ஞானவொளி பெறுதலால், “நடநலம் வளர் தரும் ஒளியே” என்று நவில்கின்றார். இடம் - சிவனுடைய இடப்பாகமாகிய உமை கூறு. வலம் - சிவம் விளங்கும் இடம். சத்தியும் சிவமுமாய் இயைந்து உலகியல் நடைபெற உதவுவதால், “இடம் வலம் வளர் தரும் இசைவே” என இசைக்கின்றார். திடம் - ஞானத் திண்மை. திண்ணிய உள்ளத்தின்கண் ஞான நலம் விளங்குதலால், “திடவுளம் வளர்தரு திருவே” என்று தெரிவிக்கின்றார். திரு - விரும்பப்படும் தன்மை. கடம் - உடம்பு. மட் குடம் போல் நிலையின்றிக் கெடுவதாகலின் உடம்பைக் கடம் என்று குறிக்கின்றார்.; ஆகுபெயர். உடம்பிலுள்ள உயிரின்கண் உள்ளுணர்வாய் ஒன்றியிருப்பதைப்பற்றி, “கடமுயிர் வளர் சிவபதியே” என்று கூறுகின்றார்.
இதனால், நடநல ஒளியும், இடம் வலம் அமைந்த இசைவும், திடவுளத்து வளரும் திருவும், கடமுயிர் வளர் பதியும் சிவபதி என்று விளக்கியவாறாம். (8)
|