4251.

     அதுவளர் அணுவே அணுவளர் அதுவே
          அதுவணு வளர்தரும் உறவே
     விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே
          விதுஒளி வளர்தரு செயலே
     மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே
          மதுவுறு சுவைவளர் இயலே
     பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே
          பொதுவெளி வளர்சிவ பதியே.

உரை:

     அதுவெனக் குறிக்கப்படும் பொருள் உருவாக்கும் அணுவும், அணுக்களால் செறிந்து திகழும் அதுவாகிய பொருளும், இரண்டாலும் பொருண்மையுறும் உறவானவனும், சந்திரனிடத்தெழும் ஒளியும், ஒளிமிகுதற்கு முதலாகிய சந்திரனும், இரண்டால் இயையும் இருள் நீக்கமானவனும், தேனிடத்திருக்கும் இனிமைச் சுவையும், இச்சுவையை மிகுவிக்கும் தேனும், தேனின் சுவையாய்த் திகழும் அழகானவனும், அம்பலத்தில் விளக்கமுறும் சிவவெளியும், சிவவெளியில் இடம் பெறும் ஞான அம்பலமும், இரண்டுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.

     அணுக்கள் காரண வடு எனவும், வகைப்படுதலின் ஊனமாகிய காரண அணுவை அது எனக் குறிக்கின்றார். காரண காரியமாகிய இருவகை அணுக்களும் இயைந்து உருவாதற்கு இறையருள் ஏதுவாதலால், “அதுவணு வளர் தரும் உறவே” என்று உரைக்கின்றார். விது - சந்திரன். மது - தேன். தேனின் சுவை நலம் மிகுதற்கு இறைவன் திருவருள் இன்றியமையாமை தோன்ற, “மதுவுறு சுவை வளர் இயலே” என்று கூறுகின்றார். பொது - அம்பலம். அம்பலத்துக்கு இடம் ஞானாகாசமாதலின், “பொது வளர் வெளி” என்று புகல்கின்றார். இரண்டிலும் இறைவனது ஞான நாடகம் நடைபெறுதல் தோன்ற, “பொது வெளி வளர் சிவபதியே” என்று உரைக்கின்றார்.

     இதனால், அணுக்கள் இடையே நிலவும் இயையும், சந்திரனிடத்து நிகழும் ஒளியின் செயலும், மதுவின் சுவையும், சிதாகாசப் பெருவெளியில் நிலவும் அம்பலமும் சிவபதியின் விளக்கமாம் எனத் தெரிவித்தவாறாம்.

     (9)