4252. நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே
நிதிநிலம் வளர்தரு நிறைவே
மதிவளர் நலமே நலம்வளர் மதியே
மதிநலம் வளர்தரு பரமே
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே
கதிநிலை வளர்தரு பொருளே
பதிவளர் பதமே பதம்வளர் பதியே
பதிபதம் வளர்சிவ பதியே.
உரை: செல்வம் பயக்கும் நிலமும், நிலத்திடைப் பெருகும் செல்வமும், நிதியும் நிலமுமாய் நிறைபவனும், அறிவின்கண் அமையும் நலமும், நலம் தரும் அறிவும், அறிவு நலம் விளங்குதற்குரிய மேலாய பரமனும், உயர்கதி அமைந்த நிலையமும், மேனிலை தோறும் உள்ள கதி வகையும், இரண்டாலும் இயைந்த செம்பொருளானவனும், பதியாய் விளங்குதற்கிடமாகிய பதமும், பதந்தோறும் நின்று நிலவும் பதிப்பொருளும், பதியும் பதமுமாய்ப் பரானந்தம் அளிப்பவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.
நிதி - செல்வம். உலகியலுக்கு இன்றியமையாத செல்வம் நிலத்தாலும், செல்வத்தால் நிலமும், நிலவளங்களாலும் வாழ்வு நிறைவு பெற்று இன்பம் செய்தலின், “நிதி நிலம் வளர்தரு நிறைவே” என்று சொல்லுகின்றார். மதி - நுண்ணறிவு. நுண்ணறிவால் ஒருவர்க்கு நலம் பெருகுவதும், நலம் பலவுடையவர் நுண்ணறிவினராதலும் இறைவன் திருவருள் காரணமாக இயைவன என்று புலப்படுத்தற்கு, “மதி நலம் வளர்தரு பரமே” என இயம்புகிறார். மதி நலங்கட்கு வேராய், அவற்றினும் மேலாய் இலகுவது பரமன் செயலாதல் விளங்க, “மதி நலம் வளர்தரு பரமே” எனப் பகர்கின்றார். கதி - உயர்பிறப்புக்கள். ஆன்மாக்கள் செய்யும் நன்ஞான நன்முயற்சிகளுக்கேற்ப அவர்கள் பெறும் கதியும், அக்கதி வாழ்க்கைக்கு இடமாகும் நிலைகளும் வேறுவேறு உளவாதலால், “கதி நிலை வளர்தரு பொருளே” என்று கூறுகின்றார். பதிப் பொருள் விளக்கத்திற்கு அவ்வப் பதங்கள் ஏதுவாதலால், “பதி வளர் பதம்” என்று இயம்புகின்றார்.
இதனால் - நிதி நிலங்கள் பெறும் நிறைவும், மதி நலங்கட்கு மேலாய பரமும், கதி நிலைகட்கு அமைந்த பொருளும், பதி பதங்களும் எல்லாம் சிவபதியின் விளக்கம் என்று தெரிவித்தவாறாம். (10)
|