63. ஞானோபதேசம்

    அஃதாவது, வடலூர் அடிகள், இறைவனை நோக்கித் தமக்குத் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுமாறு வேண்டுவது. பண் : நட்டராகம்

கலிவிருத்தம்

4253.

     கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
     விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
     தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
     உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     கண்ணும் கண்மணியுமாகியவனே! கருத்தும் கருத்தில் விளங்கும் உருக்கமுமாகியவனே! வானமும் வானத்தின்கண் அமைந்த நிறைவுமாகியவனே! சிவமே! ஒப்பற்ற மெய்ப்பொருளே! குளிர்ந்த அழகிய சந்திரன் போன்றவனே! என்னை இவ்வுலகிற் பிறப்பித்த அருட் செல்வனே! உள்ளத்தில் எழுகின்ற உள்ளொளியாகியவனே! எளியேனாகிய எனக்கு, உனது உண்மை ஞானத்தை உரைத்தருளுக. எ.று.

     கண்ணிற்குச் சிறந்த உறுப்பாய்ப் பொருள்களைக் காணும் திறமை நல்குவதுபற்றிக் கண்ணோடு நில்லாமல் “கண்மணியே” என்று சிவனைப் பரவுகின்றார். கருத்து - மனம். மனத்துக்கு மாண்பு தருவது உருக்கப் பண்பாதலால், “கருத்தின் கனிவே” என்கின்றார். கனிவு - உருகும் பண்பு. விண்ணிலுள்ள உலகங்கள் எல்லாவற்றிலும் குறைவற நிறைந்திருப்பது சிவம் என்றற்கு, “விண்ணிறைவு” கூறியவர் “சிவமே” எனவும், ஞானிகளின் ஞானத்தால் தெளிய உணரப்பட்டமைபற்றி, “தனி மெய்ப்பொருளே” எனவும் இயம்புகிறார். சிவயோகிகளால் துவாத சாந்தத்தில் காணப்படும், அமுதசந்திரனும் அடங்க, “தண்ணேர் ஒண்மதியே” எனச் சாற்றுகின்றார். கேவலத்தில் மலவிருளிற் செயலற்றுக் கிடந்த ஆன்மாவாகிய தன்னைச் சகலத்தில் உடம்பொடு கூடிப் பிறப்பித்தற்குக் காரணம் சிவத்தின் தனிப் பெருங் கருணை என்பது தெரிவிக்க, “எனைத் தந்த தயாநிதியே” என எடுத்துரைக்கின்றார். நன்மக்கள்தோறும் உள்ளத்தின்கண் உள்ளொளியாய் உணர்வு தந்தருளும் உயர்வு விளங்க, “எனக்கு உண்மை உரைத்தருளே” என வேண்டுகிறார்.

     இதனால், சிவபெருமானுடைய நலங்களையும் ஓதித் துதித்து, உண்மை ஞானத்தை உரைத்தருளுமாறு வேண்டுவதாம். இதுவே கருத்தாக வரும் பாட்டுக்கட்கும் உரைத்துக் கொள்க.

     (1)