4254.

     வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
     வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
     அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
     ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     காற்றும், காற்றிற்றோன்றிய தூய நெருப்பும், குளிர்ந்த சந்திரனும், வெவ்விய கனலும், பரவெளியும், அங்கே நிலவும் பரம் பொருளும், அப்பொருளிருக்கும் பரநிலையும், அருளும், அற்புதமும், அமுதும், அறிவும், அருளரசும், ஒளியும், உத்தமனுமாகிய சிவ பெருமானே எனக்கு உண்மை ஞானத்தை உரைத்தருள்க. எ.று.

     வளி - காற்றாகிய பூதம். காற்றிலிருந்து தீ தோற்றிற்று என்பவாகலின் நெருப்பு எனவும், பூதமாகிய தொடக்க நிலையில் காற்று நிலவும் வெளிமயமாய்த் தூயதாய் இருந்தமையின், “வெண்ணெருப்பே” எனவும் கூறுகின்றார். மதியினிடத்துத் தட்பமும் கனலிடத்து வெப்பமும் விளங்குதலால், “குளிர் மாமதி” என்றும், “கனல்” என்றும் உரைக்கின்றார். வெளி - பூதங்கள் ஐந்தையும் தன்கண் ஒடுக்கி நிற்கும் பரவெளி. மெய்ப்பொருளாகிய பரம்பொருட்கு இடம் கூறுவார், “மேனிலை” எனப்படுகிறது. அளி - அருள். ஒளி - ஞான ஒளி.

     (2)