4256.

     தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
     அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
     இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
     உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     மகனே எனக் கூவியழைத்துத் திருவருளைத் தந்தருளிய பெருமானே! அம்மையும் அப்பனும் ஆசிரியனுமானவனே! வருந்தா வண்ணம் என்னை உயர்நிலையில் ஏற்றுவித்து ஆட்கொண்டவனே! உன்னையே பராவுகின்றேனாதலால் எனக்கு அருள் ஞானம் வழங்குக. எ.று.

     தனையன் - மகன். திருவருள் சத்தி மயமாதலால் “அருட் சத்தி” எனப்படுகிறது. ஆரியன் - அறிவு தரும் அருமைபற்றி ஆசிரியனை ஆரியன் எனச் சிறப்பிக்கின்றார். இனைதல் - வருந்துதல். மேல் நிலை, உயர்ந்த ஞான நிலை. உயர்நிலையில் ஏற்றி மீளவும் கீழ்மைக்கண் விழாதபடி காத்தலால், “ஆண்டவனே” எனக் கூறுகின்றார்.

     (4)