4257. துப்பார் செஞ்சுட ரே - அருட் - சோதி சுகக்கட லே
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
உரை: பவளம் போற் சிவந்த ஒளியாயவனே! அருள் ஞான ஒளியாய் இன்பக் கடல் போன்றவனே! எனக்குத் தந்தையே! அருளரசே! அம்பலத்தாடும் அமுதாயவனே! இவ்வுலகில் என் பசியறிந்து நல்கப்படும் இனிய சுவையுடைய நல்ல உணவாய் இன்பம் தருபவனே! ஒப்பும் ஒப்பின்மையும் உடையவனே! எனக்கு உண்மை ஞானத்தை வழங்கியருள்க. எ.று.
துப்பு - பவளம். அருள் ஞானத்தால் விளையும் பயன் எல்லையற்ற இன்பப்பெருக்காதலால், “அருட் சோதிச் சுகக் கடலே” எனவும், அம்பலத்தாடும் சிவனுடைய திருக்காட்சி அமுதம் போல் இன்பம் செய்வதுணர்த்தற்கு, “அம்பலத் தாரமுதே” எனவும் இயம்புகிறார். உணவிடை நிலவும் இனிமையும் நன்மையும் சிவமே என உணரும் திறம் புலப்பட, “இன்சுவை நல்லுணவே” என்று கூறுகிறார். பசித் துண்ணும் உணவு இனிமையும் நன்மையும் தருதலால், “பசிக்குத் தந்த இன்சுவை நல்லுணவே” என்று சிறப்பிக்கின்றார். உருவாகிய வழி ஒப்புடைமையும், அருவமாகிய வழி ஒப்பின்மையும் கூறலாவதுபற்றி, “ஒப்பாய் ஒப்பரியாய்” என்று உரைக்கின்றார். (5)
|