4258.

     என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
     நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
     மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
     ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     சூரியனே! சூரியனுக்கு உள்ளிருக்கும் சுடரொளியே! என்னைப் பெற்ற தந்தையே! எனக்கு நன்மையும் நட்பும் மிகைபடத் தந்தருளிய தலைவனே! அம்பலத்தாடும் பெரிய மணி போல்பவனே! இன்ப வாழ்வுக்கேதுவாகிய மெய்ப்பொருளே! ஒன்றாகிய பரம்பொருளே! எனக்குச் சிறந்த துணைவனே! எனக்கு உண்மை ஞானத்தை வழங்குக. எ.று.

     ஈன்றவன் - தந்தை. அருள் மிகுதி பற்றி, “மிக நல்கிய நாயகனே” என்று கூறுகிறார். மன்று - சபை. பொய்ப்பொருள் துன்பம் தருவதாதலால், “சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே” என்கின்றார். பரமாம் பொருள் ஒன்றே என்பது பற்றி, “என்று” எனவும், ஒன்றாயினும் உயிர்க்கு அதுவே துணையாதல்பற்றி, “துணையே” எனவும் இயம்புகின்றார்.

     (6)