4259.

     திருவே தெள்ளமு தே - அருட் சித்த சிகாமணி யே
     கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
     மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
     உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     திருவே, தெளிந்த அமுதமாகியவனே, அருளுருவே, மனத்தின் உச்சியில் திகழும் ஞான மணியே, பிறவிக்குக் காரணமாகிய வேரை நீக்கியருள்கின்ற கண்ணுதற் கடவுளே, மணமும், மணமுடைய அழகிய மலருமாயவனே, தாமரைப்பூவில் எழுந்தருளும் தேவனாகிய பிரமனது உருவானவனே, எனக்குக் குருவே, எனக்கு உண்மை ஞானத்தைத் தந்தருள்க. எ.று.

     திரு - விரும்பப்படும் தன்மை. அருளாளரின் உள்ளத்தின் உச்சியில் விளக்கமுறும் ஞான மணியாய் விளங்குவது தோன்ற “அருட் சித்த சிகாமணியே” என்று புகழ்கின்றார். கரு - பிறப்பு. பிறப்புக்குக் காரணமாகிய மலத்தொடர்பை நீக்கி அருள்வதுபற்றி, “வேரற்றிடவே களைகின்ற கண்ணுதலே” என்று குறிக்கின்றார். கண்ணுதல் - நெற்றியில் கண்ணையுடைய சிவனாகிய ஞானமூர்த்தி என்பதாம். மரு - மணம். வானவன் - ஈண்டுத் தேவதேவனாகிய பிரமன் மேல் நின்றது.

     (7)