4261. பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
உரை: பெண்ணாகவும் ஆணாகவும், கூடி என்னை ஈன்றருளிய பெருந்தகையே! எனக்கு அண்ணனே, அரசே, திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெருமானே! நின் பெருமையை அறியாத அடியேன் விரும்பியுண்ட உண்பொருள்களை உண்ணாமல் உண்டருளிய முதல்வனே! எனக்கு உண்மை ஞானத்தை உரைத்தருள்க. எ.று.
தாயும் தந்தையுமாய் நின்று அருள் புரிபவனாதலால் சிவனை, “பெண்ணாய் ஆணுருவாய் எனைப் பெற்ற பெருந்தகையே” என்று பராவுகின்றார். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கிச் சேண் நின்றவர்க்கு இன்னும் சிந்தை செய வல்லான்” (நாகைக்கா) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. தாம் நுகர்வன பலவற்றையும் இறைவன் உடனிருந்து நுகர்கின்றான் என்னும் கருத்தினராதலின் வடலூர் வள்ளல், “நாயடியேன் களித்திட்ட உணவையெலாம் உண்ணாது உண்டவனே” என்று உரைக்கின்றார். “நன் செயலற்றிருந்த நாமற்ற பின் நாதன்தன் செயல் தானே யென்றும் தீபற” (உந்தி) என்ற சான்றோர் கூற்று ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. (9)
|