64. ஆரமுதப் பேறு

    அஃதாவது, திருவருள் ஞானமாகிய பெறற்கரிய அமுதத்தைத் தாம் பெற்றமைக்கு, மகிழ்ச்சி மிகுந்து சிவனை வணங்கித் துதித்துப் பாடுவதாகும். பண் : நட்டராகம்

கலிவிருத்தம்

4263.

     விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
     கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
     பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
     அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     மணம் கமழும் பொன்மலர் போன்றவனே! அதன்கண் ஊறுகின்ற செவ்விய தேனாகியவனே! நீர்க்கரையில் நிற்கும் மா, பலா, வாழை ஆகிய மூவகை மரத்துக் கனி போல்பவனே! அக்கனியின்கண் சுவைக்கப்படும் இனிமையின் விளைவாகியவனே! சிவசத்தியின் உள்ளே ஒளிரும் அருளொளியே! பெரும்பற்றப் புலியூர்க் கண்ணுள்ள அம்பலத்தாடும் அருளரசே! எனக்கு நினது திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தைத் தந்தருளினாய்! நினக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     பொன்னாலாகிய மலர் சிவமணம் கமழ்வது போலச் சிவன் திருமேனி விளங்குதலால், “விரைசேர் பொன் மலரே” என்று விளம்புகிறார்; நீர்நிலைகளில் கரைமேல் நிற்கும் மாவும் பலாவும் வாழையுமாகிய மூவகை மரங்களையும் நினைவுறுத்தற்கு, “கரைசேர் முக்கனியே” என்று கூறுகின்றார். ஒளி யுருவாகிய சத்தியிடமாகச் சிவம் நிற்கும் உண்மை புலப்பட, “பரைசேர் உள்ளொளியே” என்று பகர்கின்றார். பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருச்சிற்றம்பலம், “பெரும் பற்றம்பலம்” என வந்தது. அருளாரமுதம் - திருவருள் ஞானமாகிய அமுதம். பெறலருமை பற்றி இஃது ஆரமுதம் எனப்படுகிறது. யான் யாது கைம்மாறு செய்வேன் என்பது குறிப்பெச்சம்.

     இதனால், திருவருள் ஞானத்தைப் பெற்ற, வடலூர், அடிகள் அதனைத் தந்தருளிய நலத்தை வியந்து தமது கைம்மாறு செய்ய மாட்டாமையைச் சொல்லித் துதித்தவாறாம். இதனைப் பின்வரும் ஒவ்வொரு பாட்டுரையிலும் உரைத்துக் கொள்க.

     (1)