4266.

     மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
     கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
     செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
     ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     நிலையாயவனே! மெய்ம்மை பொருந்திய அருளாளர் உள்ளத்தில் என்றும் உள்ளதாகிய மெய்ப்பொருளே! கையிற் கொண்ட கனி போன்றவனே! நெற்றியில் கண்ணையுடைய செங்கரும்பு ஒப்பவனே! திருநீற்றால் வெண்மை நிறமுடைய பெருமானே! திருச்சிற்றம்பலத்தின்கண் நடம் புரிகின்ற ஐயனே! எனக்கு உன்னுடைய அருள் ஞானமாகிய அரிய அமுதத்தைத் தந்தருளினாயாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன் எ.று.

     மெய்யன் - என்றும் உள்ள பொருளாயவன். மெய்ம்மைப் பண்பு சான்ற திருவருள் ஞானத்தையுடைய பெருமக்கள் திருவுள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாதலால், “மெய்யர் உள்ளே என்றும் மேவிய மெய்ப்பொருளே” என விளம்புகின்றார். சந்தேக விபரீத ஞானங்கட் கிடமின்றித் தெள்ளிதின் விளங்குதலால், “கையாருங் கனியே” என்று கூறுகின்றார். செய்யாய் - செம்மை நிறமுடையவனே. செம்பொன்னின் நிறமுடைமை பற்றிச் “செய்யாய்” எனவும், வெண்ணிறத் திரு நீறணிந்து விளங்குதலால், “வெண்ணிறத்தாய்” எனவும் இயம்புகின்றார். ஐயன் - தலைவன்.    

     (4)