4268. முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
பித்தா பித்தனெ னை - வலித் - தாண்ட பெருந்தகை யே
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: முத்தியின்பத்தை நல்கும் பெருமானே! முத்தான்மாக்களின் திருவுள்ளத்தின்கண் எழுந்தருளி, ஞானவின்பவொளியைச் செய்யும் முழுமுதற் பரம்பொருளே! அன்பர்களின் சித்தத்தில் இருப்பவனே! சித்தி வகைகள் யாவையும் தரும் செழித்த ஞானச் சுடரே! அன்பு செய்பவர் மனத்தின்கண் பிரியாப்பித்தை உண்டு பண்ணுபவனே! நின்பாற் பித்துக் கொண்ட எளியவனாகிய என்பால் வலிய வந்து ஆண்டருளிய பெருந்தகைமைப் பெருமானே! தந்தையே எனக்கு உனது அரிய அருள் ஞான வமுதினைத் தந்தனையாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
முத்தி - சிவபோகப் பேறு. முத்தி பெறுதற்குச் சமைந்த ஞானவான்களை முத்தான்மாக்கள் என்பர். முத்தான்மாக்களின் தூய்மையே யுருவான சிந்தையின்கண்: எப்பொழுதும் எழுந்தருளுதலால், “முத்தர் உள்ளே ஒளிர்கின்ற முழுமுதல்” என மொழிகின்றார். குறைவற நிறைந்த முதற் பொருள் முழுமுதற் பொருளாம் என அறிக. சித்தி வகை: காரியசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என வரும். அணிமா முதலிய எண்வகைச் சித்திகள் என்றலும் உண்டு. பித்தன் - பித்தேற்றுபவன். பித்தேறியவனும் பித்தனாதலால், பித்தன் எனத் தம்மையே வடலூர் வள்ளல் குறிக்கின்றார். நினைவின்றித் திரிந்த தம்மைப் பொருளாக நினைந்தருளித் தன்னையே நினைந்தொழுகுமாறு செய்தமை யுரைப்பாராய் வடலூர் வள்ளல், “பித்தன் எனை வலிந்தாண்ட பெருந்தகையே” என்று போற்றுகின்றார். பொருளாகாதவரையும் பொருளாகக் கருதிப் பேணுவது பெருந்தகைமை. அத்தன் - தந்தை. (6)
|