4269. தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: தனக்குவமையில்லாத பெருமானே! என்னையிவ்வுலகிற் பிறப்பித்தருளிய அருட்செல்வனே! அருளரசே! அம்பலத்தின்கண் ஆடலைச் செய்யும் உயிர் வாழ்க்கைக்கு முதற் பொருளாகியவனே! பொன்னிறம் கொண்ட சிவனே! எனக்கு உயிராய் என்னுடைய உயிர் முழுதும் நிறைந்தருளும் பெருமானே! எனக்குத் தாயாகுபவனே! நினது அரிய அருள் ஞானவமுதத்தைத் தந்துளாயாதலால், யான் நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.
தனக்குவமையில்லாதவன் என்று சான்றோர் பராவுதலால் சிவனை, “தன்னேர் இல்லவன்” என்று சாற்றுகின்றார். மலவிருளில் கிடந்த தன்னைச் சகல ஒளியில் பிறப்பித்தற்குச் சிவனது பேரருள் காரணமாதல் பற்றி, “எனைத் தந்த தயாநிதியே” என்று புகல்கின்றார். மன் - அரசு. மன் என்னும் பெயர் மன்னே என விளியேற்றது. மன்னன் - அருளரசு. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உலகு, உடல், கருவி, கரணம், போகம் ஆகியவற்றை நல்கி வாழச்செய்தலால் சிவ பரம் பொருளை, “வாழ் முதல்” என்று சிறப்பிக்கின்றார். பொன்னிறம் உடையவனைப் “பொன்” என்கின்றார். உயிர் முழுதும் உணர்வாய் நிறைவதுபற்றி, “உயிருள் நிறை பூரணமே” என்று புகல்கின்றார். (7)
|