4270.

     ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
     வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
     தனியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
     அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     ஒளிப் பொருளாய் அவ்வொளி நடுவில் உள்ள ஒளிக்குள் உள்ளொளியாய் உள்ளவனே! தத்துவாதீத வெளியே! ஏனை வெளிவகை யாவையும் தன்னுள் அடக்கி நிற்கும் பரவெளியாகியவனே! கோயிலாகிய அம்பலத்தின்கண் ஆடியருளும் அருட்செல்வனே! அருளுருவே! எனக்கு நினது அரிய அருள் ஞானத்தைத் தந்தமையால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     ஒளிப்பொருள் எல்லாவற்றையும் சிவம் எனக் கருதும் மரபுபற்றி, “ஒளியே” என்று உரைக்கின்றார். ஒளிப் பொருளின் உள்ளும் புறமும் ஒப்ப நிலவுதல்பற்றி, “அவ்வொளியின் நடு உள்ளொளிக்குள் உள்ளொளியே” என்று உரைக்கின்றார். கண்ணுக்குள் மடியும் மடிக்குள் ஒளியும் போல, ஒளியின் நடு உள்ளொளியும் அதன் உள்ளொளியுமாக ஓதியவாறாம். மாயா மண்டலத்தின் புற வெளியை “வெளி” எனவும், அவ்வெளியையும் தனக்குள் அடக்கி நிற்கும் பரவெளியை “வெறு வெளி” எனவும் விளம்புகின்றார், தில்லையம்பலமும் கோயிலாகக் கருதப்படுதலால் “தளி” எனப்படுகிறது. அளி - பேரருள். அருளுருவாதல்பற்றி “அளி” என்று குறிக்கின்றார்.

     (8)