4271.

     மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
     தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
     பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
     அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     மருட்சி பொருந்திய நெஞ்சினையுடைய எனது மனவருத்த மெல்லாம் போக்கித் தெளிவே உருவமாக யான் பொருந்துமாறு செய்தருளிய செழுவிய ஞான விளக்கமே! மெய்ப்பொருளாயவனே! ஞான சபையின்கண் எழுந்தருளும் புண்ணியப் பொருளாயவனே! எனக்கு அரிய அருள் ஞானவமுதத்தை நல்கினையாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     மக்கட்பிறப்பு மயக்கமுடையதாகலின் தம்மை, “மருளேய் நெஞ்சகனேன்” என்று உரைக்கின்றார். “மையல் மானிடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டு அருள் செய்” எனச் சுந்தர மூர்த்திகள் தெரிவிப்பது காண்க. மையல் காரணமாக மனத்தின்கண் கவலைகள் தோன்றி வாட்டம் செய்தலால், “மனவாட்ட மெலாந் தவிர்த்து” எனவும், அவ்வாட்டங்கள் தெளிவு உடைமையால் நீங்குவது பற்றி, “தெருளே ஓர் வடிவாயுறச்செய்த செழுஞ்சுடரே” எனவும் இயம்புகின்றார். சிவஞானமே பெறற்குரிய பொருளாதலின் அதனை நல்குகின்ற ஞான சபைத் தலைவனாதல்பற்றிச் சிவபெருமானை, “பொருளை சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே” என்று போற்றுகின்றார். அருளேயுருவாவதுபற்றிச் சிவனை, “அருளே” என்று புகல்கின்றார்.

     (9)