4272. முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
இன்பே என்னுயி ரே - எனை - ஈன்ற இறையவ னே
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: இளமைப் பொழுதிலேயே என்பால் வலிய வந்து என்னை ஆட்கொண்டருளிய முன்னோனாகிய பெருமானே! எனக்கு இன்பனாய், என்னுடைய இனிய உயிராய் என்னைப் பிறப்பித்தருளிய இறைவனே! பெரிய பொன்னம்பலத்தையுடையவனே! சிவபோகத்தைத் தருகின்ற ஞானசபையில் எழுந்தருளும் அன்புருவாயவனே! எனக்குப் பெறற்கரிய திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தாயாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
மக்கள் எய்தும் பருவங்கள் எல்லாவற்றிலும் இளமை முற்பட்டதாதலால் அதனை, “முன்பு” எனக் குறிக்கின்றார். அக்காலத்தே சிவ நினைவு இல்லாதிருக்கவும் அந் நினைவைத் தோற்றுவித்து அந் நெறியே ஒழுகச் செய்தமை விளங்க, “என்றனையே வலிய வந்து ஆட்கொண்ட முன்னவனே” என்று மொழிகின்றார். அந் நினைவு செயல்களிலேயே ஒழுகச் செய்தமை பற்றி, “ஆட்கொண்ட” என வுரைக்கின்றார். முன்னவன் - முன்னே பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள். சிவ வொழுக்கத்தால் இன்பம் எய்தினமை பற்றி, “இன்பே” எனச் சிவனைக்
குறிக்கின்றார். மக்கள் உலகில் பிறப்பித்தமையால், “என்னை ஈன்ற இறையவனே” என்று ஏத்துகின்றார். பொன் வேய்ந்திருத்தலால், “பொன் பேரம்பலம்” எனப்படுகிறது. சிவஞானத்தால் சிவானந்தம் அனுபவிக்கப் படுகின்றமை புலப்படுத்தற்கு, “சிவபோகம் செய் சிற்சபை வாழ் அன்பே” என்றும், அன்பே சிவமாதலால், “அன்பே” என்றும் புகல்கின்றார். (10)
|