4273. பவனே வெம்பவ நோய் - தனைத் தீர்க்கும் பரஞ்சுட ரே
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: சிவபெருமானே! வெவ்விய பிறப்பிறப்பாகிய நோயை நீக்கியருளும் பரஞ்சுடராகிய இறைவனே! சிவனே! செம்பொருளே! திருச்சிற்றம்பலத்தில் கூத்தாடுபவனே! தவஞானம் பெற்ற பெருமக்கட்குத் தீங்குண்டாகாவண்ணம் காத்து, வேண்டும் அருளாக்கத்தைத் தரவல்ல பரமனே! எனக்குத் திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தைத் தந்தாயாதலால் உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
சிவபிரானுக்குரிய பெயர்களில் பவன் என்பது ஒன்று. ஆணவத்தில் செயலற்றுக் கிடக்கும் உயிர்களைத் தனது பேரருளால் சகலத்தில் பிறக்கச் செய்பவன் என்று இதற்குப் பொருள் கூறுவதும் உண்டு. “பவன் எம்பிரான்” (சதகம்) என்று மணிவாசகர் உரைப்பது காண்க. பவநோய், பிறப்பிறப்புக்களால் உண்டாகும் நோய். பிறவா வாழ்க்கையை அருளும் பெருமானாதலின், “வெம்பவ நோய்தனைத் தீர்க்கும் பரஞ்சுடரே” என்று விளம்புகின்றார். துன்பம் தரும் இயல்பினவாதல் பற்றிப் பிறப்பிறப்புக்களை, “வெம்பவ நோய்” என்று கூறுகின்றார். செம்பொருள், செம்பொருளாவது தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையாற்றன்னை யொன்றுங் கலத்தலின்மையிற் றூய்தாய்த் தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள், விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல் பற்றி அதனை, “செம்பொருள்” என்றார் எனப் பரிமேலழகர் கூறுவது காண்க. தவநேயம் - தவஞானம். தவஞானிகளை முன்னும் பின்னும் நின்ற வினைப் போகம் வந்து தாக்காமைப் பொருட்டுத் தனது திருவருளால் காத்தோம்புவது பற்றிச் சிவபெருமானை, “தவநேயம் பெறுவார்தமைத் தாங்கியருள் செயவல்லவனே” என்று போற்றுகின்றார். (11)
|