4274. தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: தேனாகவும், இனிய பழமாகவும், சுவை பொருந்திய கரும்பாகவும், அமுதமாகவும், மெய்யன்பர் உள்ளத்தில் இனிக்கின்ற ஒப்பற்ற பரம்பொருளே! வானம், காற்று, நெருப்பு, நீர் நிலமாகிய ஐம்பூதங்களானவனே! நினது திருவருளாகிய அரிய அமுதத்தைத் தந்தாயாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
ஞானத்தால் சிவனைச் சிந்திப்பவர் உள்ளத்தில் தேனாகவும் இனிய அமுதமாகவும் தித்திக்கின்றவன் என்று சிவனை மணிவாசகர் முதலிய சான்றோர் அனுபவித்ததுபோல, வடலூர் வள்ளலும் அனுபவிக்கின்றாராதலால், “தேனாய்த் தீம்பழமாய்ச் சுவைசேர் கரும்பாய், அமுதம் தானாய் அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே” என்று போற்றுகின்றார். நில முதலிய பூதங்கள் ஐந்தும் சிவத்தின் வடிவம் என்பது ஞான நாட்டமுடைய பெருமக்கள் நாளும் கண்டு மகிழும் காட்சியாதலால் வடலூர் வள்ளலும், “வானாய்க் கால அனலாய்ப் புனலாய் அதில் வாழ் புவியாயானாய்” என்று பரவுகின்றார். (12)
|