4275. பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.
உரை: திருநீறணியும் தோள்களையுடைய சிவபெருமானே! திருவருள் நிலையமாகிய பொன்னம்பலத்தில் எழுந்தருளும் அருளரசே! குற்றம் பொருந்திய எனக்கு முன்பே அருள் ஞானம் வழங்கினாயாகவும், திருச்சிற்றம்பலத்தில் விளங்கும் ஞானச் சுடரொளியாய், கடியத் தக்கவனாகிய எனக்குத் தாய் எனப்படும் சிவகாமிவல்லியைத் தேவியாக உடையவனே! இப்பொழுதும் அடியவனாகிய எனக்கு நினது அரிய அருள் ஞானமாகிய அமுதத்தை வழங்கினாய்; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
பொடி - வெண்பொடியாய்த் திருநீற்றைக் குறிப்பதாயிற்று. இறைவன் திருவருளைப் பெறுதற்கேற்ற இடமாதலின், “அருட் பொன்னம்பலம்” எனப்படுகிறது. செடியேன் - குற்றமுடையவன். செடி - குற்றம். இளமைப் போதிலேயே தமக்குச் சிவநினைவும் திருவருள் ஒழுக்கமும் தோன்றினமை குறித்தற்கு, “அன்று அளித்தாய்” என அறிவிக்கின்றார். தில்லையம்பலத்தில் தமக்குச் சிவபரம்பொருள் அருட்சுடராய்க் காட்சி தந்தமையின், “திருச்சிற்றம்பலச் சுடரே” என்று சிறப்பிக்கின்றார். கடியேன் - விலக்கத்தக்கவன். சிவகாமியாகிய தேவியைச் “சிவகாமக் கொடி” என்று புகல்கின்றார். இளமைப்பொழுதில் தோற்றுவித்ததுபோல முதுமைப்பருவத்தும் அத்திருவருள் உணர்வு தந்து வலியுறுத்தப்பட்டமை விளங்க, “அடியேற்கு இன்றளித்தாய்” எனப் பாராட்டுகின்றார். இளமையில் யான் நினைவின்மையால் கடியத்தக்கவனாய் இருந்தேனாயினும் இப்போது நினக்கு அடியவனாய் ஒழுகுகின்றேன் என்பாராய், “அடியேற்கு இன்றளித்தாய்” என்று தெரிவிக்கின்றார். (13)
|