65. உபதேச வினா
அஃதாவது, ஞான நெறிக்கண் ஆன்மாவாகிய தலைவி, ஞானப் பொருள்களைக் காண விரும்புவதும், அக்காட்சிக்குத் துணை புரிதல் வேண்டி, உயிர்த் தோழியாகிய உண்மையறிவை உசாவுவதுமாகும்.
கலித்தாழிசை 4276. வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
உரை: வேதாந்த நிலை, உபநிடதங்களால் எய்தலாகும் பிரம ஞானப்பேறு. சித்தாந்த நிலை, சிவாகமங்களால் பெறலாகும் சிவஞானானந்த நிலை. சிவயோகப் போகம் பெறும்நிலை. பொதுநடம் - அம்பலத்தில் ஆடும் திருக்கூத்து. நாதாந்த வீதி, நிலம் முதல் நாத தத்துவ மீறாகவுள்ள தத்துவக்கிரமம். கடத்தல் - விலகுதல். (1)
|