4279. நவநிலை மேற்பர நாதத் தலத்தே
ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
மவுனத் திருவீதி வருவாயோ தோழி
வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
உரை: நவநிலைமேற் பரநாதத்தலம் - நவநிலைகளுள் மேலதாகிய பரநாதத்தலம். நவநிலைகளை அனுபவ மார்க்கம் என்று மொழிந்து, நிலைகளை விந்து, நாதம், பரவிந்து, பரநாதம், திக்கிராந்தம், அதிக்கிராந்தம், சம்மௌனம், சுத்தம், அதீதம் என உபதேசப் பகுதியால் (பக் - 97) அறிகின்றோம். திக்கிராந்தம் - கூத்து வகை. பரநாதத் தலத்து ஞானநடனம், திக்கிராந்தம், அதிக்கிராந்தம் என இருவகையாம். நடனக்காட்சியில் எய்தும் சம்மௌன நிலைக்குத் தோழியை அழைக்கின்றமையின், “மவுனத் திருவீதி வருவாயோ தோழி” எனத் தலைவி கூறுகின்றாள். (4)
|