4283. அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
உரை: பதிஞானம் துணையாக, அறிவுருவாகிய பதிப்பொருளை யறிதற்கு ஏதுவாவது ஞான சபையாதலால் அதனை, “அறிவில் அறிவை அறியும் பொது” எனப் புகல்கின்றார். பதிஞானப் பேற்றுக்கு, உறுதுணையாய்ச் செறியும் உயிரின் உண்மையறிவு வேண்டும் என்பாளாய்த் தலைவி தோழியைச் “செறிவில் அறிவாகிச் செல்வாயோ” எனக் கேட்கின்றாள். உண்மையறிவாவது - கல்வி கேள்விகளாலாகிய செயற்கை அறிவுடன் கூடிய இயற்கையறிவு. (8)
|