4290.

     ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
     காலங் கருதுவ தேன் - நெஞ்சே
     காலங் கருதுவ தேன்.

உரை:

     கடல் கடையப் பிறந்த நஞ்சினைத் தானுண்டு, தேவர்கட்கு அமுதளித்த சிவனது பேரருளைச் சிறப்பித்தற்கு, “ஆலம் அமுதாக்கும் அண்ணல்” என்று புகழ்கின்றார். “விரிகடல் வருநஞ்சும் உண்டு இறைஞ்சு வானவர்தமைத் தாங்கிய இறைவன்” (வலஞ்சுழி) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க. முப்போது எனவும் அறுபொழுது எனவும் காலம் கருதுவதுண்மையின், “காலம் கருதுவது ஏன்” எனக் கூறுகின்றார்.

     (4)