4323. ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம் ஆடிய
உரை: ஆரா அமுது - உண்ணப்படாத ஞானவமுது. அண்ணித்தல் - இனித்தல். திருமால் மலரிட்டு அருச்சித்தபோது ஒன்று குறைய அதற்காக மலர்போன்ற தன் கண்ணைப் பறித்து வழிபட்டார் என்ற வரலாறு பற்றி, “நாராயணன் விழி நண்ணிய பாதம்” என்று கூறுகிறார். “நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு, ஏற்றுழி யொருநாள் ஒன்று குறையக் கண்ணிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கியவன்” (வீழி மிழலை) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. நயத்தல் - விரும்புதல். (3)
|