4328.

     சாகா வரந்தந்த தாரகப் பாதம்
          சச்சிதா னந்த சதோதய பாதம்
     தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
          திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய

உரை:

     தாரகப்பாதம் - ஆதாரமாகிய திருவடி. உதயம் - சதோதயம். சதம் - நித்தத் தன்மை. சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய சிவபோகத்தில் நித்திய வாழ்வு தரும் திருவடியை, “சச்சிதானந்த சதோதய பாதம்” எனக் கூறுகின்றார். தேகாதி - உடல், கருவி, உலகு, போகங்கள். சிருட்டித்தல் - படைத்தல். திதி முதல் ஐந்தொழில், சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்பன.

     (8)