4329. ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய
உரை: ஓங்காரம் - ஓம் என ஓதப்படும் பிரணவம். சிவம் எழுந்தருளும் இடமாதல் விளங்க, “ஓங்கார பீடம்” எனப்படுகிறது. சிவனை, “ஓங்கார மெய்ப்பொருள்” (ஆலம் பொழில்) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பர். சிவ பரம்பொருள் என ஒன்றாகவும், சிவமும் சத்தியுமென இரண்டாகவும் கூறுதலால், “ஒன்றாய் இரண்டாய் ஓங்கிய பாதம்” என வுரைக்கின்றார். உந்தியாகிய துரியத்தானத்தில் ஞானக்கண் கொண்டு யோகியர் காண்பதால், “துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்” என்று சொல்லுகின்றார். தூங்காத தூக்கம் - சாக்கிராதீத வொழுக்கம். (9)
|