4393. ஈடனை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
றீடணை யீர்இங்கு வாரீர்
ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை: ஈடணையற்ற நெஞ்சு - மூவகை யாசையும் துறந்த நெஞ்சம். பொருளாசை, புத்திரராசை, உலகியலாசை என்ற இம்மூன்றும் ஈடணை எனப்படும். இவற்றை ஈஷணாத்திரயம் என்பது வழக்கு. ஈடணை ஏடணை எனவும் வழங்கும். மண் பெண் பொன் என்று மூன்றாக மொழிபவரும் உண்டு. அணைவுறல் - சேர்தல். ஈடு அணையீர், ஒப்பில்லாதவரே, ஆடல் - அம்பலத்தின்கண் ஆடல் புரிதல். (41)
|