4411.

          ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
          ஆக்க மடுத்தீரே வாரீர்
          தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்

உரை:

     ஞானப்பேறு நினைந்து ஏங்கியிருந்தமை புலப்பட, “ஏக்கம் கெடுத்து” எனவும், ஊக்கத்தாலன்றி ஏக்கம் கெடாமை பற்றி “ஊக்கம் கொடுத்து” எனவும், மீளவும் ஏங்காமைப் பொருட்டுத் திருவருள் ஞானமாகிய ஆக்கம் நல்கினமை விளங்க, “ஆக்க மடுத்தீரே” எனவும் இயம்புகின்றார். அடுத்தீர் - அடையச் செய்தீர். மடுத்தீர் எனக் கொண்டு நிறைவித்தீர் எனினும் பொருந்தும்.

     (59)