4412. ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
றோமை அறிவித்தீர் வாரீர்
சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
உரை: மனத்திற் கொண்டு போற்றும் பிரணவம் “ஊமை எழுத்து” எனப்படுகிறது. இதனை மானதப் பிரணவம் என்பர். ஓகாரத்தை முதலெழுத்தாக வைத்து நோக்கும் பிரணவம், “ஆமை எழுத்து” எனப்படுகிறது. ஆமைக்குள் தலையும் காலும் ஒடுங்குதல் போலப் பிரணவத்தின் உறுப்புக்களான அகர வுகர மகரங்கள் ஒடுங்குதலின் இவ்வாறு கூறப்படுகிறது என்பர் அறிந்தோர். ஓமை அறிவித்தீர் - ஓம் என்னும் உருவப் பிரணவத்தைக் காட்டினீர். சேமம் - காப்பு. (60)
|