4424.

          எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
          எண்ணம் எனக்கில்லை வாரீர்
          வண்ணம் அளிக்கீன்றீர் வாரீர். வாரீர்

உரை:

     எண்ணமெல்லாம் உமது எண்ணமல்லால் வேறோர் எண்ணம் எனக்கில்லை என்பது, நான் எண்ணுவதெல்லாம் நீவிர் எண்ணுவிக்க எண்ணுகின்றேனே யன்றி எனக்கென ஒரு எண்ணமும் இல்லை என்பதாம். இதனை “நம் செயலற்று நாமற்று நிற்றல் எனத் திருவுந்தியார் கூறுகிறது. “வெளிவளர் தெய்வக் கூத்துகந் தானைத் தொண்டனேன் விளம்பு மாவிளம்பே” எனப் பெரியோர் உரைப்பது காண்க.

     (72)