4431. ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
றேகாத லாற்சொன்னீர் வாரீர்
வேகாத காலினீர் வாரீர். வாரீர்
உரை: ஏகாத கல்வி - உடம்பொடு அழிந் தொழியாத கல்வி. “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து” எனத் திருவள்ளுவர் சாகாக் கல்வியை விளக்குவது காண்க. வேகாத கால் - வெந்தழிக்காத பிராண வாயு. உடம்பினுள் இருந்து வெம்மை செய்யும் பிராணக் காற்றுப் போலின்றி, உயிரினுள் உயிராய் இருந்து உணர்வு நல்கி உய்தி பெறுவிக்கும் சிறப்புப் பற்றி, சிவனை, “வேகாத காலினீர்” என விளம்புகின்றார். (79)
|