4448. ஓரா துலகினைப் பாரா திருநினக்
கோரா வகைஎன்றீர் வாரீர்
பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
உரை: ஓராது உற்றுணர்தலின்றி, உலகியல் நிகழ்ச்சிகளைப் பாராதிருப்பின், உள்ளத்தில் பற்றுத்தோன்றி உனது ஒருமை நிலையை அலைக்காது என்பாராய், “உலகினைப் பாரா திரு நினக்கு ஓராவகை” யாம் என உபதேசிக்கின்றார். ஓராமைக்கு உபாயம் உரைத்தவாறாம். உலகியலை யோராது உள்பொருளாகிய சிவத்தை ஓர்ந்துணரின், பிறப்பிறப் புண்டாகா எனத் திருவள்ளுவர் முதலிய சான்றோர் அறிவுறுத்தலால், “பேரா நிலை தந்தீர்” என்று பேசுகின்றார். பேரா நிலை, சிவபோகத்திலிருந்து நீங்காத நிலை. (96)
|