4461. வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
உரை: வேற்று முகம் - வேறு தேவர்களைச் சிந்தை செய்யேன். வெட்கம் - நாணம். மாற்றுதற்கு எண்ணாதீர், என் மனவொருமையை மாற்றற்கு நினைத்தல் வேண்டா. கூற்று - எமன். மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்துப் போக்கிய வரலாறு, இங்கே குறிக்கப்படுகிறது. சேவடி - சிவந்த திருவடி. குலமறிந்து பின் பெண் கொள்வது உலகியல் முறை; கொண்ட பின் குலம் பேசுவது குற்றம். குறித்தம் - கருதுதல். எம்மோடு விளையாடுதற்கு ஏற்ற ஒப்பற்ற தருணம் இதுவாகலின் வருக என்பது கருத்து. (3)
|