4462.

     இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
          என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
     கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
          குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
     நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
          நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
     எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
          என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்

உரை:

     இல்லாமை - நல்லறிவில்லாமை. மணமாலையிட்டீர் - ஞான மணம் கமழும் சிவமாலை யணிந்தீர். குணம் கொண்டீர் - குணமாகக் கொண்டு ஆட்கொண்டவரே. நல்லார், நற்பண்புடையவர்; நல்லார் மகளிரையும் குறிக்கும். நற்றாயில் இனியவர் - பெற்ற தாயினும் இனிமை செய்பவர். “தாயினும் நல்லன் சங்கரன்” என்பர் திருநாவுக்கரசர்.

     (4)